ADDED : ஆக 04, 2025 11:40 PM
புவனேஸ்வர்:ஒடிஷாவில், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டரை, ஊழல் வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஒடிஷாவின் பவுத் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., எனப்படும் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக கோலப் சந்திர ஹன்ஸ்டா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், தன் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.
அதில், பாலசோர் ஒட்டியுள்ள பகுதிகளில் குடும்பத்தினர் பெயரில், 44 வீட்டு மனைகள் வாங்கியது கண்டறியப்பட்டது. இதுதவிர, அவரது பெயரில் உள்ள பல மாடி கட்டடம், 1 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, 2.38 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி கணக்கில் 1.34 கோடி ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதுதவிர, பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான டைரியையும், அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதன்படி, ஹன்ஸ்டா தன் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
கடந்த 1991ல், அரசுப் பணியில் சேர்ந்த ஹன்ஸ்டாவின் தற்போதைய மாத சம்பளம் 1.08 லட்சம் ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.