பஞ்சாபில் விஎச்பி நிர்வாகி கொலை: பாக்.,கிற்கு தொடர்பு
பஞ்சாபில் விஎச்பி நிர்வாகி கொலை: பாக்.,கிற்கு தொடர்பு
UPDATED : ஏப் 18, 2024 01:07 PM
ADDED : ஏப் 18, 2024 12:54 PM

சண்டிகர்: பஞ்சாபில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விகாஸ் பக்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு உள்ளதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
பஞ்சாபின் ரூப்நகர் ரயில் நிலையத்தில் கடை நடத்தி வருபவர் விகாஸ் பக்கா. இவர் நங்கல் பகுதி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த சனிக்கிழமை (ஏப்., 13) தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், மந்தீப் குமார் மற்றும் சுரேந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பஞ்சாபில் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களை குறிவைத்து ஐஎஸ்ஐ அமைப்பு செயல்பட்டு வருகிறது. பஞ்சாபில் கொலை சம்பவத்தில் ஈடுபட பணம் மற்றும் போதை மருந்து தருவதாக கூறி வேலையில்லாத இளைஞர்களை ஐஎஸ்ஐ இழுத்து வருகிறது.
பஞ்சாபின் நவ ஷேரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை தேடி போர்ச்சுகல் சென்றுள்ளார். அங்கு, ஐஎஸ்ஐ., ஆட்களின் வலையில் சிக்கினார். பஞ்சாப் திரும்பிய அவர் போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை இழுக்கவும், கொலை சம்பவத்தில் ஈடுபட வைக்கவும் முயற்சியில் ஈடுபட்டார்.
விகாஸ் பக்கா கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு ரூ.70 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான உத்தரவு போர்ச்சுகல்லில் இருந்து வந்துள்ளது. இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானில் செயல்படும் பாபர் கல்சா இண்டர்நேஷனல் என்ற அமைப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

