தேச விரோத கருத்தரங்கு; தடுத்து நிறுத்திய துணைவேந்தர்
தேச விரோத கருத்தரங்கு; தடுத்து நிறுத்திய துணைவேந்தர்
ADDED : மே 14, 2025 02:51 AM

திருவனந்தபுரம் : இந்தியா - பாகிஸ்தான் போரை கொச்சைப்படுத்தும் விதமாக கேரள பல்கலையின் தமிழ்த்துறை நடத்தவிருந்த கருத்தரங்கு, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர், 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, கேரள பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
கேரள பல்கலையின் தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சில மாணவர்கள் வாயிலாக எனக்கு தகவல் கிடைத்தது. கருத்தரங்கின் உள்ளடக்கம் குறித்து விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது.
அதாவது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மத்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், பீஹார் தேர்தலில் வெற்றி பெறவே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இதை நிகழ்த்தியதாகவும் கருத்தரங்கில் பேசப்பட இருந்தது தெரியவந்தது.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போர், தேர்தல் வெற்றியை மனதில் வைத்தே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருந்தது.
பல்கலை பதிவாளரிடம் கூறி இந்த கருத்தரங்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டுஉள்ளது. தேச விரோத கருத்தை பேசும் கருத்தரங்கிற்கு அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட துறையின் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து பல்கலை வேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துறைத்தலைவரிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.