ADDED : ஜூலை 22, 2025 07:57 AM

புதுடில்லி : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், 74, தன் பதவியை திடீரென நேற்றிரவு ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று எதிர்க்கட்சிகளின் அமளியுடன் துவங்கியது. லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை சமாளித்து சபை அலுவல்களை நடத்த முயற்சிகளை மேற்கொண்டார்.
அதே போல், ராஜ்ய சபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும், சபையில் முழக்கமிட்ட எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்துவதில் மும்முரம் காட்டினார்.
இந்தச் சூழலில், திடீரென துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் நேற்றிரவு அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றார்.
அதற்கு முன், 2019 - 22 வரை மேற்கு வங்க கவர்னராக ஜக்தீப் தன்கர் இருந்தார். 1990 - 91 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான இணையமைச்சராக பதவி வகித்தார்.