ADDED : மார் 08, 2024 02:01 AM

பெங்களூரு: 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்காக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இன்று பெங்களூரு வருகிறார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ஒரு நாள் அரசு முறை பயணமாக, புதுடில்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் வாயிலாக பெங்களூரு வருகிறார்.
சிறப்பு விமானம்
எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கும் அவரை, முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர்.
இங்கிருந்து, மாரத்தஹள்ளி சஞ்சய்நகரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்துக்கு செல்கிறார்.
மையத்தை ஆய்வு செய்த பின், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். பின், எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து, கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு விமானம் வாயிலாக செல்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி வருகையை ஒட்டி, வர்த்துார் சாலை, வெளிவட்ட சாலை, தொட்டநெகுந்தி முக்கிய சாலை, பசவாநகர் முக்கிய சாலை, யம்லுார் முக்கிய சாலை, சுரஞ்சன்தாஸ் சாலை, பழைய விமான நிலைய சாலைகளில், இன்று காலை 9:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்தாமல், மாற்று சாலையை பயன்படுத்தும்படி போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

