தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உ.பி., தேர்தலில் விஜய் பஸ்!

உ.பி., தேர்தலில் விஜய் பஸ்!

உ.பி., தேர்தலில் விஜய் பஸ்!


ADDED : செப் 19, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி - -மார்ச் மாதங்களில் நடக்க உள்ளது. நான்கு கட்டமாக இந்த தேர்தல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அனைத்து கட்சிகளும் ஏற்கெனவே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன.

தற்போது இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு சிகப்பு நிற பஸ்ஸை தயார் செய்துள்ளார். மூன்று அறைகள், கான்பிரன்ஸ் ஹால், டாய்லெட் என பல நவீன வசதிகளைக் கொண்ட இந்த பஸ்ஸில் கூறையில் இருந்தபடியே பிரசாரம் செய்ய முடியும்.

கரூர் தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு வடிவமைத்தவர்தான் அகிலேஷ் யாதவிற்கு இந்த பஸ்ஸை தயார் செய்துள்ளார். முதல் பஸ் உ.பி., சென்றடைந்துவிட்டது. மற்ற இரண்டு பஸ்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இந்த பஸ்ஸின் முன் பக்கத்தில் ஒரே ஒரு படம் இடம் பெறும். அது அகிலேஷ யாதவின் படம்தான். கூட்டணிக்கட்சியான காங்கிரசின் எந்த படமும் கிடையாதாம். அவ்வளவு ஏன்… சமாஜ்வாதி கட்சியை தொடங்கிய அகிலேஷின் அப்பா முலாயம் சிங்கின் படம் கூட இடம் பெறாதாம்.

இந்த பஸ் மிகவும் பெரியது என்பதால் கிராமங்களின் சிறிய தெருக்களில் செல்வது குறிப்பாக திரும்புவது கடினம் என்கின்றனர். இன்னொரு பக்கம் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க யோகி ஆதித்யநாத் ஒரு சிறிய வேனை பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்துள்ளார்.

'அகிலேஷின் வாகனம் பணக்காரர்கள் பயணம் செய்யக்கூடியது… ஏழைகள் பிரயாணம் செய்யும் வண்டி என்னிடம் உள்ளது… போட்டி… ஏழைக்கும் பணக்காரருக்கும்' என்கிறாராம் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

எது எப்படியோ…. தமிழக சினிமா பாணி தேர்தல் பிரசாரம் இப்போது வட இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.

ஏன் தமிழகத்திற்கு இடமில்லை?

சினிமாவை தணிக்கை செய்யும் மத்திய சென்சார் போர்டு உறுப்பினர்கள் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. வட இந்தியாவைச் சேர்ந்த நடிகை பிரீத்தி ஜிந்தா, நடிகர்கள் சுனில் ஷெட்டி, பங்கஜ் திரிபாதி உட்பட 18 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மலையாள இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சுப்ரியா யார்லகட்டா ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.

இந்த 18 பேர் கொண்ட குழு சென்சார் போர்டு தலைவர் சசி சேகர் வேம்பதி தலைமையில் செயல்படும். இந்திய சினிமா என எடுத்துக்கொண்டால் அதில் அதிக அளவில் சினிமாக்கள் தமிழகத்தில்தான் எடுக்கப்படுகின்றன. இதனால் கண்டிப்பாக தமிழக திரைப்படத் துறையிலிருந்து ஒருவர் அங்கத்தினாராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஒரு தமிழர் கூட மத்திய சென்சார் போர்டில் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இந்த குழுவை நியமிப்பது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை. இதன் இணை அமைச்சர் நம்ம ஊரைச் சேர்ந்த எல்.முருகன். இவர் பதவியில் இருக்கும் போதே தமிழகத்திற்கு இந்த குழுவில் இடம் இல்லாமல் போனது வருத்தமான விஷயம் என டில்லி தமிழர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சினிமா ஹீரோ தமிழக முதல்வராக இருக்கும் போது ஏன் சென்சார் போர்டில் தமிழகம் ஒதுக்கப்படுகிறது எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஏன் ஒதுங்குகின்றனர்?

இந்தியா முழுதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவில் இந்த பண்டிகை பிரபலம். ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் சிலைகள் பெரிய அளவில் நிறுவப்பட்டு பூஜைகள் நடக்கும். இதில் கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள் பங்கேற்பர்.

மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று விநாயகருக்கு பூஜை செய்தார். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வெவ்வேறு இடங்களில் பங்கேற்றனர்.

டில்லியிலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிர கவர்னராக முன்னர் பதவி வகித்தார். எனவே டில்லியில் மஹாராஷ்டிர அரசின் விருந்தினர் மாளிகையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று பூஜை செய்தார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலின் வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் துணை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

விநாயகர் சதுர்த்தி போல நவராத்திரி நேரத்தில் மேற்கு வங்கத்தில் துர்க்கை பூஜை பிரபலம். டில்லியில் பெங்காலிகள் அதிகம் வசிக்கும் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் துர்க்கை சிலைகள் வைத்து பெரிய பந்தல் அமைத்து கொண்டாடுவர்.

அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றாலும் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் இந்த இரண்டு விழாக்களிலும் எப்போதுமே பங்கேற்பதில்லை. பல ஆண்டுகளாக இவர்கள் இந்த பண்டிகைகளை ஒதுக்கி வந்தாலும் தற்போது சோனியா குடும்பம் பங்கேற்காதது பேசு பொருளாகி வருகிறது.

கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

இம்மாதம் 23, 24 தேதிகளில் டில்லியில் சிந்தனை அமர்வு எனப்படும், 'சிந்தன் சிவிர்' என்கிற ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி. அனைத்து மத்திய அமைச்சர்களும் இதில் பங்கேற்பர்.

மூன்றாம் முறையாக மோடி பிரதமராகி இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். சுய முன்னேற்றம், மக்களுடன் தொடர்பு, நிர்வாகம் ஆகியவை குறித்து இங்கு அலசப்படும்.

அமைச்சர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அமைச்சகங்களிடையே ஒருங்கிணைப்பு என பல விஷயங்கள் குறித்து பிரதமர் பேசுவார். பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மார்க் அடங்கிய, 'ப்ரோகரஸ் ரிப்போர்ட்' போல அமைச்சர்களின் ரிப்போர்ட்கள் பிரதமருக்கு அளிக்கப்படும்.

இந்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் என கடந்த 6 மாதங்களாக செய்திகள் அடிபட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவை மாற்றப்படலாம் என அமைச்சர்களிடையே பேசப்படுகிறது. பல அமைச்சர்கள் தங்கள் பதவி பறிபோகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.

அமைச்சரவை மாற்றம் நடக்குமா நடக்காதா என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். ஒருவர் பிரதமர், மற்றவர் அமித் ஷா என்கின்றனர் பா.ஜ.,வினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us