ADDED : அக் 19, 2024 05:22 PM

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக, விஜயா கிஷோர் ரஹத்கரை மத்திய அரசு நியமித்துள்ளது.
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய மகளிர் ஆணையம் 1990 சட்டத்தின் பிரிவு 3ன்கீழ் விஜயா கிஷோர் ரஹத்கர், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன், ஆணையத்தின் உறுப்பினராக, டாக்டர் அர்ச்சனா மஜூம்தாரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பர்.
யார் இந்த விஜயா ரஹத்கர்:
விஜயா ரஹத்கர், தற்போது பா.ஜ.க.,வின் தேசிய செயலராகவும், ராஜஸ்தான் மாநில கூடுதல் பொறுப்பாளராகவும் உள்ளார். புனே பல்கலைகழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டமும், வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
அரசியல் பின்புலம் இல்லாத ரஹத்கர், 1995ம் ஆண்டு பா.ஜ.,வில் பூத் கமிட்டி பணியாளராக இருந்து கட்சியில் உயர்ந்து வந்துள்ளார்.
அவுரங்காபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் உறுப்பினராக 2000த்திலிருந்து 2010 வரை இருந்தார். 2007-2010ல் அவுரங்கபாத் மேயராகவும் இருந்தார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

