ADDED : பிப் 04, 2025 06:51 AM

ஷிவமொக்கா: ''இன்னும் 8 - 10 நாட்களில் மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும். இதில் மீண்டும் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவேன்,'' என, மாநில தலைவர் விஜயேந்திரா நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கு, தேர்தல் நடத்த மேலிடம் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக ஷிவமொக்காவில் நேற்று விஜயேந்திரா அளித்த பேட்டி:
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல், 8 - 10 நாட்களில் நடக்க உள்ளது. அப்போது அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிடும். பா.ஜ.,வுக்குள் ஜனநாயகம் உள்ளது. வரும் நாட்களில், நேர்மையான முறையில் உட்கட்சி தேர்தல் நடத்தும் கட்சி என்றால், அது பா.ஜ., மட்டுமே.
எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் முடிவுகளின்படி, தாலுகா, மாவட்டம், மாநிலம், தேசிய தலைவர் தேர்தல் நடக்கின்றன. மாநிலத்தில் மோசமான ஆட்சி, ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற எங்கள் கட்சி மூத்தவர்கள், தொண்டர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக கட்சியின் வளர்ச்சி, மாநில நலனுக்காக நான் எந்தளவுக்கு உழைத்துள்ளேன் என்பது மாநில மக்களுக்கும், கட்சியினருக்கும் தெரியும். என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் மாநில தலைவராக தொடருவேன்.
இம்முறை மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது. அதுபோன்று மாநில தலைவர் பதவிக்கும் போட்டி நிலவுகிறது. இங்கு நடக்கும் அனைத்தையும் கட்சி மேலிட தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் கட்சி குறித்தும், தலைவர்கள் குறித்தும் எந்தவிதமான கருத்தையும் தெரிவித்ததில்லை. எனக்கு அளித்த பொறுப்பை திறமையாக கையாண்டுள்ளேன். இன்னும் எட்டு நாட்களில் நிலவரம் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

