ADDED : ஜூலை 20, 2025 02:40 AM
சண்டிகர்:சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியாவின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டித்து
மொஹாலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் விக்ரம் சிங் மஜிதியா வீட்டில், ஜூன் 25ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்ரம் சிங் மஜிதியா கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பின் கடந்த, 6ம் தேதி பாட்டியாலா நியூநாபா சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, மொஹாலி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று, மஜிதியா ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மஜிதியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரி, அரசு வழக்கறிஞர் பெர்ரி சோபாத் மனுத்தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, மஜிதியாவின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட், 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, பாட்டியாலா சிறைக்கு மஜிதியா அழைத்துச் செல்லப்பட்டார். மொஹாலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.