பதவிக்காக புலம் பெயர்ந்த விலங்கல்ல காங். - எம்.எல்.சி. ஹரிபிரசாத் காட்டம்
பதவிக்காக புலம் பெயர்ந்த விலங்கல்ல காங். - எம்.எல்.சி. ஹரிபிரசாத் காட்டம்
ADDED : ஜன 22, 2024 06:19 AM

சிக்கமகளூரு: ''அதிகாரத்துக்காக நான், புலம் பெயர்ந்த பிராணி அல்ல. மாணவர் காலத்தில் இருந்தே, நான் காங்கிரசில் இருக்கிறேன். பதவிக்காக நான் கட்சி மாறுபவன் அல்ல,'' என காங்., மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் கூறியதாவது:
கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனம் குறித்து, எனக்கு எந்த தகவலும் தெரியாது. எந்தெந்த விதிமுறையின் அடிப்படையில், நியமிக்கின்றனர் என்பதும் எனக்கு தெரியாது. மாநிலத்தில் எங்கள் கட்சி, ஆட்சியில் உள்ளது.
ஆனால் கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனத்தில், கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது தெரியாது.
எனக்கு காங்கிரஸ் மீது அதிருப்தி இல்லை. கட்சி எங்களுடையது. நான் பதவிக்காக புலம் பெயர்ந்து வந்த விலங்கு அல்ல. மாணவர் காலத்தில் இருந்தே, நான் காங்கிரசில் இருக்கிறேன். பதவிக்காக நான் கட்சி மாறுபவன் அல்ல.
சிலர் காங்கிரஸ் தங்களுடையதே என, கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன். சித்தராமையா பதவிக்காக புலம் பெயர்ந்து வந்தவர் என்ற கருத்து இருக்கலாம். நான், இதுபற்றி விமர்சிக்க மாட்டேன்.
நாங்கள் சிறு வயதில் இருந்தே, மூத்தவர்கள் கூறியபடி ஹிந்து மதத்தின் தலைவர் என்றால், அது சங்கராச்சார்யா என்ற நம்புகிறோம். தற்போது அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுக்கு, சங்கராச்சார்யா செல்லவில்லை.
இது ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்திருந்தால், எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்க வேண்டியது இல்லை. நாங்களாகவே பங்கேற்றிருப்போம். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் சென்றுள்ளோம். ஆனால் அயோத்தியில் நடப்பது, அரசியல் நிகழ்ச்சியாகும்.
அயோத்தி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க பா.ஜ.,வினர் யார். ராமன் இவர்களுக்கு போன் செய்து, அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கும்படி கூறினாரா.
நாட்டில், 33 கோடி கடவுள்கள் உள்ளனர். எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்வோம். இந்த கோவிலுக்குதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அயோத்தி விஷயத்தில் பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.