பாம்பு கடியால் பலியான நபர்! சடலத்துடன் அதே பாம்பை உயிருடன் எரித்த ஊர் மக்கள்
பாம்பு கடியால் பலியான நபர்! சடலத்துடன் அதே பாம்பை உயிருடன் எரித்த ஊர் மக்கள்
ADDED : செப் 23, 2024 02:50 PM

கோர்பா; சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்பு கடியால் பலியானவரின் சடலத்துடன் அதே பாம்பை பிடித்து உயிருடன் மக்கள் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு; கோர்பா மாவட்டத்தில் பைகாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் திகேஸ்வர் ரத்தியா. வழக்கம் போல் உறங்குவதற்காக தமது படுக்கையை தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.
உடலில் வேகமாக விஷம் ஏறவே இதை அறிந்த அங்குள்ளோர் திகேஸ்வர் ரத்தியாவை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்ற போராடினர். எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போக திகேஸ்வர் ரத்தியா உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்த ஊர் மக்கள் அடுத்து செய்த காரியம் தான் வினோதமானது. அந்த பாம்பை தேடிப்பிடித்த அவர்கள், திகேஸ்வர் ரத்தியாவின் சடலத்துடன் சேர்த்து எரிக்க முடிவு செய்தனர். அதற்காக பாம்பை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு வைத்தனர்.
வீட்டில் இருந்து இறுதிச்சடங்குக்காக சடலத்துடன் உறவினர்கள், கிராம மக்கள் ஊர்வலமாக சுடுகாட்டுக்குச் சென்றனர். அப்போது பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த பாம்பையும் உடன் கொண்டு சென்றனர். கட்டை ஒன்றுடன் பாம்பை நன்றாக கட்டி, சடலம் எரியும் போது சிதையில் தூக்கி போட்டு எரித்தனர்.
ஊரில் உள்ள மற்றவர்களையும் இதே பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது? அதற்காக தான் இப்படி செய்தோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு உயரதிகாரிகள் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.