தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மணிப்பூரில் மீண்டும் வன்முறை! ; வீடுகள் தீக்கிரை; இணைய சேவை 'கட்'

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! ; வீடுகள் தீக்கிரை; இணைய சேவை 'கட்'

மணிப்பூரில் மீண்டும் வன்முறை! ; வீடுகள் தீக்கிரை; இணைய சேவை 'கட்'


UPDATED : பிப் 10, 2026 11:47 PM

ADDED : பிப் 10, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2026 11:47 PM ADDED : பிப் 10, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின சமூகங்கள் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டம் மத்திய அரசின் முயற்சியால் ஓய்ந்திருந்தது. இந்நிலையில், புதிதாக பதவியேற்ற பா.ஜ., அரசில், கூகி இனத்தை சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக பதவியேற்றார். இது, புதிய அரசில் அங்கம் வகிப்பதில்லை என்ற கூகி அமைப்புகளின் முடிவுக்கு எதிரானது எனக்கூறி அங்கு போராட்டம் வெடித்தது. தற்போது அது மிகப்பெரிய வன்முறையாக மாறி இருப்பதால், கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பழங்குடியினரான கூகி -- மெய்டி - நாகா சமூகத்தினர் இடையே 2023ல் இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது.

மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்டி மக்கள், எஸ்.டி., அந்தஸ்து கேட்டு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்க மணிப்பூர் அரசுக்கு உயர் நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.

மெய்டி மக்கள் தலைநகர் இம்பால் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். எனவே இதற்கு மலைப்பகுதி பழங்குடியினரான கூகி, நாகா சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழங்குடியின ஒற்றுமை பேரணி என்ற ஒன்றை 2023 மே 3ல் நடத்தினர். இந்த பேரணி தலைநகர் இம்பால் அருகே வந்த போது மெய்டி மற்றும் பிற பழங்குடியினர் இடையேயான வன்முறையாக வெடித்தது.

மணிப்பூர் முழுதும் கலவரம் பரவியது. 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன.

கலவரத்துக்கு பொறுப்பேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து கடந்தாண்டு விலகினார். சட்டசபை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால், மாநிலத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து சமீபத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.

யூனியன் பிரதேசம்



மணிப்பூர் புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் சமீபத்தில் பதவியேற்றார். இவர் மெய்டி இனத்தவர். இவரது அமைச்சரவையில் பா.ஜ., -- எம்.எல்.ஏ.,வும் கூகி பழங்குடி இனத்தவருமான நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக பதவியேற்றார்.

இது, அவரது சமூகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. கூகி சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள், தங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

மெய்டி சமூக ஆதிக்கம் உள்ள அரசில் இணைவது, இந்த கோரிக்கையை பலவீனப்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த முடிவை மீறி நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக அரசில் இணைந்ததால், அவரை 'துரோகி' என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போராட்டங்கள், சாலை மறியல் நடந்தன.

இவை, பழங்குடியின சமூக இளைஞர்களிடையே மீண்டும் பிரச்னையை துாண்டிவிட்டன. இந்நிலையில் உக்ருல் மாவட்டம், லித்தான் பகுதியில் நாகா சமூகத்தை சேர்ந்த நபரை கூகி சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த 7ம் தேதி இரவு தாக்கினர்.

இந்த செய்தி பரவியதை தொடர்ந்து இரு பிரி வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு


உக்ருல் மாவட்டத்தின் சில ஊர்களில் கூகி இனத்தவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதால் இரண்டு நாட்களாக நடந்த வன்முறை, மூன்றாம் நாளாக நேற்று தீவிரமடைந்தது. லித்தான் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதில், பெரும்பாலான வீடுகள் நாகா சமூகத்தினருக்கு சொந்தமானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கே துப்பாக்கி சூடு சத்தங்களும் கேட்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வன்முறை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உக்ருல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து இணைய சேவைகளையும் நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, மணிப்பூர் வன்முறையின் தீவிரம் குறித்து பெரிய அளவில் தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.

'இன மோதல் ஆக்க வேண்டாம்' வன்முறை தொடர்பாக கூகி - ஜோ கவுன்சில் மற்றும் கூகி மாணவர் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில், 'உக்ருல் மாவட்டத்தில் நடந்த சம்பவம், மது அருந்திய சில நபர்களிடையே ஏற்பட்ட மோதலாகத் துவங்கியது. இதை இன மோதலாக மாற்ற வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்துள்ளன. நாகா தரப்பு அமைப்பான கோகோமி, இதை மறைமுக போர் என்றும், மாநில அரசின் தோல்வி எனவும் விமர்சித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us