அசாமில் இரு பிரிவினரிடையே வன்முறை:ராணுவம் கொடி அணி வகுப்பு
அசாமில் இரு பிரிவினரிடையே வன்முறை:ராணுவம் கொடி அணி வகுப்பு
ADDED : டிச 25, 2025 01:45 AM

திமாபூர்: அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அசாம் மாநிலம் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்திற்கு உட்பட்டது கெரோனி . இங்கு கர்பி மற்றும் பிகாரி சமூக மக்களிடையே நிலம் தொடர்பாக போராட்டம்15 நாட்களுக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டுதினங்களுக்கு முன்னர் கலவரமாக மாறிய போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறியது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 போலீசார் உட்பட 70 பேர் வரையில் காயம் அடைந்தனர்.
மாநில போலீஸ் டிஜிபி ஹர்மீத் சிங் கூறியதாவது: போராட்டக்காரர்கள்கடைகளுக்கு தீ வைப்பதற்கு சிலிண்டர்களை பயன்படுத்தி உள்ளனர். ஒருவர் தீ விபத்திலும் மற்றொருவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் பலியாகி உள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் கலவரம் பரவாமல் தடுக்கும் விதமாக கர்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் காலவரயைற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து இணைய தள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாருக்கு உதவும் வகையில் ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது.60 முதல் 80 வரை கொண்ட ராணுவ குழு கலவரம் பாதித்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.இவ்வாறு டிஜிபி கூறினார்.
சம்பவம் குறித்து பேசிய மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நிலைமை சீரடைந்து வருகிறது. இயல்புநிலை படிப்படியாக திரும்பிவருகிறது . கர்பி மக்கள் இந்தி பேசும் ஆக்கிரமிப்பாளர்களை மேய்ச்சல் நிலங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தடையாணை காரணமாக உடனடியாக ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்

