லடாக் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை பா.ஜ., அலுவலகம், போலீஸ் வாகனங்கள் எரிப்பு
லடாக் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை பா.ஜ., அலுவலகம், போலீஸ் வாகனங்கள் எரிப்பு
ADDED : செப் 25, 2025 04:46 AM

லே: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு நான்கு பேர் பலியாகினர். பா.ஜ., அலுவலகம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்டில் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதில், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்துஸ்து வழங்க வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும், அப்பகுதியைச் சேர்ந் தோர் கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த காலநிலை ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சூக், 35 நாட்களுக்கான உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 10ம் தேதி துவங்கினார்.
அவருடன் சேர்ந்து, லே தன்னாட்சி குழுவின் உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில், இருவரின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இந்த சூழலில், மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டக் குழுவினருடன் அடுத்த மாதம் 6ம் தேதி பேச்சு நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இந்த பேச்சை, விரைவில் நடத்த வலியுறுத்தி லடாக்கில் நேற்று முழு அடைப்பு நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர்.
இதனால், லடாக்கின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து சேவை முடங்கியது. லே பகுதியில் ஊர்வலமாக சென்ற நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தினர். இதையடுத்து, பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீஸ் வேன் மற்றும் அங்கிருந்த கார்களை தீ வைத்து எரித்தனர். அப்பகுதியில் இருந்த பா.ஜ., அலுவலகமும் தீக்கிரையானது.
இதனால், அப்பகுதியே போர்க்களமானது. கூட்டத்தை கலைக்க, போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். கட்டுக்கடங்காமல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சண்டையில், நான்கு பேர் பலியாகினர். போலீசார் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர். பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது.
மாநில அந்தஸ்து கோரி நடத்த போராட்டங்களில், முதன்முறையாக லடாக்கில் வன்முறை வெடித்ததை அடுத்து, யூனியன் பிரதேசம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ள்ளது. இதற்கு லடாக் துணைநிலை கவர்னர் கவிந்தர் குப்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'லடாக்கின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில், திட்டமிட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன. இதற்கு காரணமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில், லே மாவட்டம் முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என, தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடக்க விரும்பாததால், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக் அறிவித்துள்ளார்.