கொலை வழக்கில் சிக்கிய நடிகர்; கர்நாடக சிறையில் ராஜ உபசாரம்: இணையத்தில் படம் வைரல்!
கொலை வழக்கில் சிக்கிய நடிகர்; கர்நாடக சிறையில் ராஜ உபசாரம்: இணையத்தில் படம் வைரல்!
UPDATED : ஆக 26, 2024 11:25 AM
ADDED : ஆக 26, 2024 07:06 AM

பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் குற்றவாளியா? வி.ஐ.பி.,யா என இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கர்நாடகா சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சட்ட விதிமுறைகளை மீறி, சிறையில் தர்ஷனுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிறை விதிகள்
நடிகர் தர்ஷன் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தர்ஷன் உடன் ரவுடி வில்சன் மற்றும் அவரது மேலாளராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் அந்த புகைப்படம், சிறை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
விவாதம்
இவர் கொலை குற்றம் சாட்டப்பட்டவரா? வி.ஐ.பி.,யா என இணையத்தில் விவாதம் கிளம்பி உள்ளது. சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது எப்படி நடக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த புகைப்படம் குறித்து சிறை அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
சி.பி.ஐ., விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ்.ஷிவானா கூறியதாவது: 'ரேணுகாசாமி கொலை வழக்கில், போலீசார் மீது நம்பிக்கை இருந்தது. இந்த புகைப்படத்தை கண்டதும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என எண்ணம் வந்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
7 பேர் சஸ்பெண்ட்
கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறை சட்டத்தை மீறி சலுகைகள் அளித்த 7 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிறையில் தர்ஷன் டீ மற்றும் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

