ராமர் - சீதைக்கு கெஜ்ரிவால் அவமதிப்பு மன்னிப்பு கோரினார் வீரேந்திர சச்தேவா
ராமர் - சீதைக்கு கெஜ்ரிவால் அவமதிப்பு மன்னிப்பு கோரினார் வீரேந்திர சச்தேவா
ADDED : ஜன 21, 2025 09:45 PM
புதுடில்லி:ராமர் - சீதையை அரவிந்த் கெஜ்ரிவால் அவமதித்ததாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இந்துக்களிடம் மன்னிப்பு கோரிய பா.ஜ., மாநிலத் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் ஆம் ஆத்மியும் பா.ஜ.,வும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.
திங்கட்கிழமை நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், ராமர் உணவு தேடிச் சென்றபோது தங்க மானாகத் தோன்றிய ராவணனால் சீதை கடத்தப்பட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கெஜ்ரிவால் ராமாயணக் கதையைத் தவறாக மேற்கோள் காட்டியதாகவும், காவியத்தில் உள்ள மற்றொரு கதாபாத்திரமான மாரீச்சன் என்ற அசுரன், ராமனை தங்க மானாக திசை திருப்பினார். அதனால் சீதையை ராவணன் கடத்திச் சென்றான் என சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து பிரச்சின் ஹனுமன் கோவிலுக்கு மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா சென்றார். அங்கு வழிபட்டபின், ராமர் - சீதையை அரவிந்த் கெஜ்ரிவால் அவமதிப்பு செய்ததற்கு தான் மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.
அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக பாவமன்னிப்பு கோரும் விதமாக இன்று உண்ணாவிரதம் இருக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சுனாவி இந்துக்கள், தங்கள் தேர்தல் பேரணிகளில் தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் அறியாமை காரணமாக தவறான கதைகளைச் சொல்லி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கெஜ்ரிவாலை இந்து சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.