ADDED : பிப் 13, 2025 05:13 AM

மங்களூரு: தமிழ் நடிகர் விஷால் பொது மக்களோடு ஒன்றாக இணைந்து சாமி தரிசனம் செய்து, உடல் நிலை சரியாகும் படி வழிபட்டார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவரது கைகள் நடுங்கியதால், உடல் நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மங்களூரு, பக் ஷிகேரே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். இந்த கோவிலில் வருடாந்திர, 'ஹரிபடே ஜராந்தய நேமா' எனும் சக்தி வாய்ந்த திருவிழா நடைபெற்றது.
இதில் காந்தாரா படத்தில் வருவது போல, 'பூத கோளம்' வேஷம் கட்டி ஒருவர் ஆடி வந்தார்.
அப்போது, தன் உடல்நிலையை சீராக்கும்படி விஷால் வேண்டிக் கொண்டார். 'உடல்நிலை கூடிய விரைவில் குணமாகும். குணமான பிறகு தர்மஸ்தாலாவில் உள்ள ஸ்ரீ கேஷத்திராவிற்கு வந்து துலாபாரம் எனும் எடைக்கு எடை காணிக்கை கொடுக்க வேண்டும்' என பூசாரி கூறினார்.
இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்தார். மூன்று மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக இருந்தார்.
இதன்பின், விஷால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
காந்தாரா சினிமா மூலம் இங்கு உள்ள தெய்வம் மற்றும் நேமோத்சவம் பற்றி தெரிந்து கொண்டேன். துளுநாட்டு நேமோத்சவத்தை முதல் முறையாக நேரில் பார்த்து உள்ளேன். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளேன்.
கடந்த திங்கள் கிழமை கொல்லுார் மூகாம்பிகையை தரிசனம் செய்தேன். அதன் பிறகு நேராக இங்கு வந்து உள்ளேன். வளர்ந்து வரும் துளு திரைப்படத் துறைக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

