மைசூரு தொகுதியில் வாய்ப்பு கேட்டு சித்தராமையாவிடம் கெஞ்சும் விஸ்வநாத்!
மைசூரு தொகுதியில் வாய்ப்பு கேட்டு சித்தராமையாவிடம் கெஞ்சும் விஸ்வநாத்!
ADDED : மார் 14, 2024 06:29 AM

மைசூரு : காங்கிரஸ், ம.ஜ.த.,வில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய விஸ்வநாத், தற்போது மைசூரு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் எதிர்பார்க்கிறார்.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாத், வெற்றி பெற்று எம்.பி.,யானார். மாறிய அரசியல் சூழ்நிலையில், காங்கிரசை விட்டு ம.ஜ.த.,வில் இணைந்தார். மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார். 2019ல் பா.ஜ.,வுக்கு வந்தார்.
ஹுன்சூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின், இவரை எம்.எல்.சி.,யாக பா.ஜ., தேர்வு செய்தது.
தற்போது இவரது பார்வை காங்கிரஸ் மீது திரும்பியுள்ளது. லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், காங்., சீட் எதிர்பார்க்கிறார். தனக்கு சீட் கொடுக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மைசூரில் விஸ்வநாத் நேற்று கூறியதாவது:
நான் டெக்னிக்கலாக பா.ஜ.,வில் இருக்கிறேன். மைசூரு தொகுதியில் சீட் வழங்கும்படி, சித்தராமையாவிடம் கேட்டுள்ளேன். காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வை சுற்றிக்கொண்டு, மீண்டும் காங்கிரசுக்கு வந்த முத்தஹனுமேகவுடாவுக்கு டிக்கெட் கொடுத்துள்ளனர். எனக்கு ஏன் டிக்கெட் கொடுக்கக் கூடாது?
இதற்கு முன்பு எம்.பி.,யாக, மைசூரு தொகுதியில் பல பணிகளை மேற்கொண்டேன். எனவே நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மைசூரு எம்.பி.,யாக பிரதாப் சிம்ஹா நன்றாக பணியாற்றினார். நமது பணிகளை விட, நமது நடவடிக்கைகளை மக்கள் அதிகம் கவனிப்பர். பிரதாப் சிம்ஹாவின் பேச்சும், செயலும் அவருக்கு
பாதிப்பை ஏற்படுத்தின. நானே புத்திசாலி, நானே மேன்மையானவன் என, அகங்காரத்துடன் கூறியதால், அவருக்கு சீட் கை நழுவியிருக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.

