ADDED : ஜன 07, 2025 01:49 AM
மும்பை, ஜன. ''நீங்கள் தேர்தலில் ஓட்டு போட்டதால், எனக்கு முதலாளி ஆகிவிடுவீர்களா,'' என, கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்தவர்களிடம், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கோபத்துடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக உள்ளார்.
தன் பாராமதி தொகுதியில், மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் அஜித் பவார் பங்கேற்றார். அப்போது பலரும், தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு முண்டியடித்தனர். அவற்றை வாங்க மாட்டேன் என்று முதலில் அஜித் பவார் கூறினார். ஆனாலும், மக்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் ஆத்திரம்அடைந்த அஜித் பவார், மனு கொடுக்க வந்த ஒருவரிடம், ''நீங்கள் தேர்தலில் எனக்கு ஓட்டு போட்டீர்கள். அதற்காக நீங்கள் என்னுடைய முதலாளி ஆகிவிடுவீர்களா. உங்களுடைய கூலித் தொழிலாளி என்று என்னை நினைத்தீர்களா,'' என, கடுமையுடன் கூறினார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.