கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கு இன்று... ஓட்டுப்பதிவு! 28,257 ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
கர்நாடகாவின் 14 தொகுதிகளுக்கு இன்று... ஓட்டுப்பதிவு! 28,257 ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
ADDED : மே 07, 2024 05:35 AM

பெங்களூரு,: கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக, 14 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள, 28,257 ஓட்டுச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பகவந்த் கூபா, முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உட்பட 227 வேட்பாளர்களின் எதிர்காலம் இன்று நிர்ணயிக்கப்படுகிறது.
கர்நாடகாவில், ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.
2.59 கோடி வாக்காளர்
இன்று காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். 1.29 கோடி ஆண்கள்; 1.29 கோடி பெண்கள்; 1,945 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
பா.ஜ., காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. 14 லோக்சபா தொகுதிகளில், 227 வேட்பாளர்கள் இறுதி களத்தில் உள்ளனர். இதில், 206 ஆண்கள், 21 பெண்கள் அடங்குவர்.
இதில், பிரதானமாக பா.ஜ., சார்பில், தார்வாடில், மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி; பீதரில் மத்திய ரசாயன துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா; ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை; பெலகாவியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்; ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றனர்.
ஈஸ்வரப்பா, வினய்குமார்
காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணி; தாவணகெரேவில் தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி பிரபா.
பெலகாவியில் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் ஹெப்பால்கர்; சிக்கோடியில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா ஜார்கிஹோளி; ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார் ஆகியோர் இறுதி களத்தில் உள்ளனர்.
இவர்களின் அரசியல் எதிர்காலம், இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது.
இத்துடன், ஷிவமொகாவில் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, பா.ஜ.,வுக்கும்; தாவணகெரேவில் இன்சைட்ஸ் ஐ.ஏ.எஸ்., நிறுவனர் வினய் குமார் போட்டி வேட்பாளர்களாக களமறிங்கி, காங்கிரசுக்கும் பெரிய இடையூறாக இருக்கின்றனர்.
மிகவும் பதற்றம் மிகுந்த தொகுதியாக உள்ளதால், பெலகாவியில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஏழு தொகுதிகள்
இரண்டாம் கட்ட தேர்தலில், அதிகபட்சமாக, தாவணகெரேவில் 30 பேரும்; குறைந்தபட்சமாக ராய்ச்சூரில் எட்டு பேரும் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் இடம்பெறலாம்.
அதற்கு மேல் இருந்தால், இரண்டாவது இயந்திரம் இணைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், சிக்கோடி, பாகல்கோட், பீதர், கொப்பால், தார்வாட், தாவணகெரே, ஷிவமொகா ஆகிய ஏழு லோக்சபா தொகுதிகளில், தலா இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.