UPDATED : மே 25, 2024 11:40 PM
ADDED : மே 25, 2024 11:34 PM

புதுடில்லி : ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில், 58 தொகுதிகளுக்கு நேற்று நடந்த ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் அதிகபட்ச ஓட்டுகள் பதிவாகின.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடக்கிறது. ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதி களுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், 92 தொகுதிகளுக்கும், மே 13ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில், 96 தொகுதிகளுக்கும், மே 20ல் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், 49 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஹரியானாவில் 10; ஜார்க்கண்டில் நான்கு; ஒடிசாவில் ஆறு; உ.பி.,யில் 14; பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா எட்டு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லியில் ஏழு, ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.
காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி தொகுதிக்கு, மே 7ல் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
![]() |
ஹரியானாவின் கர்னால் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. முதல்வர் நாயப் சிங் சைனி போட்டியிடுகிறார்.
மாலை நிலவரப்படி, 59.06 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தின் ஜங்கல் மஹால் தொகுதியில் 78.10 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக உ.பி.,யில், 43.95 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.
அனந்த்நாக் - -ரஜோரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தன் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறி, காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.
ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது; சில இடங்களில் மின்னணு ஓட்டு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, உடனே சரி செய்யப்பட்டது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை, 485 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல், ஜூன் 1ல், 57 தொகுதிகளில் நடக்கிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.