101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
ADDED : ஜூன் 25, 2025 02:45 PM

திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்(101 வயது) கவலைக்கிடமாக உள்ளார், அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இடதுசாரி இயக்கத்தின் மூத்த அரசியல்வாதியான அச்சுதானந்தனுக்கு தற்போது வயது 101. வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட, உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
பின்னர் அவர் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அச்சுதானந்தன் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,மருத்துவர்கள் இதை தம்மிடம் கூறியதாகவும் அவரது மகன் வி.எஸ். அருண்குமார் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன்,மா.கம்யூ., மாநில செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அச்சுதானந்தன் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரித்து அறிந்தனர்.
இந் நிலையில், அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணப்பட வில்லை என்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவர் உடல்நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால் இடதுசாரி இயக்கத்தினர், மற்ற அரசியல்கட்சிகள் தலைவர்கள், தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.