ADDED : ஜூலை 08, 2025 10:06 PM

சண்டிகர்:தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த, தேடப்படும் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
கபுர்தலா மாவட்டம் பக்வாரா நகரைச் சேர்ந்த ஹிமான்ஷு சூட், தன் கூட்டாளிகளுடன் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஒரு ஹோட்டல் உரிமையாளரை சுட்டனர். இந்த வழக்கில், சூட் தேடப்பட்டு வந்தார். மேலும், மத்தியப் பிரதேசம் மற்றும் கபுர்தாலாவில் இருவரை கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்தது.
தாதா லாரன்ஸ் பிஸ்னோய்க்கு நெருக்கமான உதவியாளரான, துபாயில் வசிக்கும் நமித் சர்மா ஆலோசனைப்படி இந்த மூன்று கொலைகளையும் செய்ய, ஹிமான்ஷூ சூட் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
அமிர்தசரஸ் சிறப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஹிமான்ஷு சூடை கைது செய்து, மூன்று துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். ஹிமான்ஷு சூட் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.