வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : பிப் 27, 2025 01:11 PM

புதுடில்லி: வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லி., கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த ஆறு மாதங்களாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், வக்பு சொத்துக்கள் தொடர்புடைய தரப்பினர், சட்ட வல்லுனர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களை கேட்டது.
கூட்டத்தின் முடிவில், வக்பு மசோதா தொடர்பாக, 14 சட்டத்திருந்தங்களுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக பார்லி கூட்டுக்குழு அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லி., கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் மார்ச் 10ம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் தொடரின் 2வது அமர்வில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மத்திய அரசு தாக்கல் செய்யும் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.