பீஹாரை போல தமிழகத்திலும் நடக்கும்; பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் அண்ணாமலை
பீஹாரை போல தமிழகத்திலும் நடக்கும்; பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார் அண்ணாமலை
UPDATED : நவ 15, 2025 06:31 PM
ADDED : நவ 15, 2025 06:30 PM

புதுச்சேரி: பீஹாரை போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தேர்தல் இன்னும் வரவில்லை. இன்னும் தேர்தலுக்கான நேரமும், காலமும் இருக்கிறது. இன்றைக்கு நாம் நவம்பர் 15ம் தேதியில் இருக்கிறோம். நமக்கு இன்னும் ரொம்ப நாட்கள் இருக்கிறது. தமிழக தேர்தல் கூட்டணி பொறுமையாக இருப்போம்.
எல்லாம் சிறப்பாக, நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பீஹாரில் நாங்களும் ஜெயித்தோம். அவர்களையும் ஜெயிக்க வைத்தோம். அவர்களும் ஜெயித்தார்கள். எங்களையும் ஜெயிக்க வைத்தார்கள். எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் கூட்டணிக்கு உள்ளேயே போட்டி இருந்ததால் தான் மொத்தமாக தோற்றார்கள்.
பஞ்சபாண்டவர்கள் ஐந்து நபர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள். எல்லோரும் அண்ணன், தம்பிகளாக இருந்தார்கள். எல்லோரும் மேடையில் ஒன்றாக இருந்தார்கள். கடைசி வரை ஒன்றாக இருந்தோம். பீஹாரை போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழகத்தில் எங்களை பொறுத்தவரை, டாஸ்மாக் வருமானம் ரூ. 52 ஆயிரம் கோடி எடுத்து விட்டோம் என்றால், கள்ளு கடை திறப்பு அதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருமானம் 3 ஆண்டுகளில் கொடுக்க முடியும் என்ற வெள்ளை அறிக்கையை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, பாஜ வெப்சைட்டிலும் போட்டு இருக்கிறோம்.
எதிர்ப்பு அரசியல்
எங்களைப் பொறுத்தவரை டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தக் கூடாது, கள்ளுக்கடையை திறக்க வேண்டும். விஜய் தேர்தல் கமிஷன் நடத்தக்கூடிய ஒன்றையும், பாஜவுடன் லிங்க் படுத்தி அதையும் எதிர்க்கிறார். எது செய்தாலும் எதிர்க்கிறார். எதிர்ப்பு அரசியலை மட்டும் பார்த்து மக்கள் ஓட்டளிக்க போவது கிடையாது. என்ன செய்யப் போகிறீர்கள், ராகுலுக்கு இதை செய்து செய்து தான் பனிஷ்மென்ட் கிடைக்கிறது. 95 தேர்தல்களில் ராகுல் தோல்வி அடைந்து இருக்கிறார்.
95 தோல்விகள்
ராகுல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்து பொறுப்பேற்ற பிறகு 95வது தோல்விதான் பீஹார் தேர்தல். எதிர்ப்பு அரசியலை ஒரு லெவலுக்கு மேல மக்கள் விரும்ப மாட்டார்கள். விஜய் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறார் என்றால் என்ன தவறு என்று சொல்லட்டும். பீஹாரில் நாம் ஓட்டுரிமையை பறித்திருக்கிறோமா அதை சொல்லட்டும். தமிழக வெற்றி கழகத்திலிருந்து ஒரு குழுவை பீஹாருக்கு அனுப்பட்டும். அங்கு போய் பார்த்துவிட்டு வரட்டும். வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டும் கையில் எடுத்தால் காங்கிரசுக்கு கிடைத்த அதே நிலைமைதான் மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும்.
தவறு... தவறு...!
2026ம் ஆண்டு தேர்தலில் பார்க்கப் போகிறீர்கள். பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி ஜன் சுராஜ் பீஹாரில் எவ்வளவு ஓட்டு வாங்கினார். 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் நின்றார். மக்கள் இன்று ஆளுங்கட்சி நன்றாக இருப்பதால் அவர்கள் ஆளுங்கட்சிகளுக்கே ஓட்டளிக்கின்றனர். எல்லோரும் யோசித்துக் கொள்ள வேண்டும். நான் கட்சி ஆரம்பித்து விட்டேன் என்பதற்காக எதிர்த்தால் அது சரியாக இருக்குமா? தவறு செய்யாதபோது தவறு தவறு என்று ஏன் சும்மா சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

