வெற்றியை நிர்ணயித்த வெறும் 30 ஓட்டுகள்: பீஹாரில் மாயாவதி கட்சியின் ஒற்றை எம்எல்ஏ
வெற்றியை நிர்ணயித்த வெறும் 30 ஓட்டுகள்: பீஹாரில் மாயாவதி கட்சியின் ஒற்றை எம்எல்ஏ
ADDED : நவ 15, 2025 06:15 PM

பாட்னா: பீஹாரில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தில் வென்றுள்ளது. அதிலும் இந்த வெற்றியை வெறும் 30 ஓட்டுகளே நிர்ணயித்துள்ளன.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகளில் சில ஆச்சரியங்கள் இருந்திருக்கின்றன. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றவர்களுக்கு மத்தியில் சொற்ப எண்ணிக்கையில் வென்று எம்எல்ஏ ஆனவர்களின் விவரமும் தெரிய வந்திருக்கிறது.
இதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 192 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரேயொரு தொகுதியில் வென்றிருக்கிறது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. இந்த வெற்றியை வெறும் 30 ஓட்டுகளே நிர்ணயித்து இருக்கின்றன என்பது தான் கூடுதல் சுவாரஸ்யம்.
பகுஜன் சமாஜூக்கு ஒற்றை வெற்றியைத் தேடி தந்த அந்த தொகுதி ராம்கர். இங்கு பகுஜன் சமாஜ் வேட்பாளராக போட்டியிட்டவர் சதிஷ்குமார் யாதவ். பாஜ வேட்பாளராக களம் கண்டவர் அசோக்குமார் சிங்.
இந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தொடக்க சுற்றுகளில் சதிஷ்குமார் யாதவ் முன்னிலையில் இருந்தார். படிப்படியாக அடுத்தடுத்த சுற்றுகளில் இருவருக்குமேயான ஓட்டு வித்தியாசம் என்பது குறைந்து கொண்டே வந்துள்ளது.
யார் வெற்றி பெற போகிறார்கள் என்று தெரியாத நிலையில் இரு கட்சிகளின் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் காணப்பட்டனர். வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாத சூழலில் 25 சுற்றுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முடிவில், வெறும் 30 ஓட்டுகளில் பாஜ வேட்பாளர் அசோக்குமார் சிங்கை தோற்கடித்து எம்எல்ஏ ஆகி உள்ளார் சதிஷ்குமார் யாதவ். இவர் பெற்ற ஓட்டுகள் 72,689 ஆகும். பாஜ வேட்பாளர் அசோக்குமார் சிங் பெற்றது 72659 ஓட்டுகள். இருவருக்குமான ஓட்டு வித்தியாசம் வெறும் 30 தான். 192 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜூக்கு ஒரே ஒரு எம்எல்ஏ இந்த தேர்தல் மூலம் கிடைத்துள்ளார்.
இதே தொகுதிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது. 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், கிட்டத்தட்ட இந்த தொகுதியை ஜெயிக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் சுதாகர் சிங்கிடம், பகுஜன் சமாஜ் வேட்பாளர் அம்பிகா சிங், 189 ஓட்டுகளில் வெற்றியை தவறவிட்டார். இவருக்கு கிடைத்தது 57,894 ஓட்டுகள். ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் சுதாகர் சிங், 58,083 ஓட்டுகள் பெற்றார்.
மேலும் 2020ம் ஆண்டு தேர்தலில் 78 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ், செயின்புர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் முகமது ஜமாகான் வென்றார். அதன் பின்னர், நிதிஷ் கட்சிக்கு தாவி, அங்கு அமைச்சரவையில் இடம்பெற்றார்.
2020 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைக்க வேண்டிய 2 எம்எல்ஏக்கள் கிடைக்காமல் போனது. அதற்கு ஆறுதல் தரும் வகையில் இப்போது 30 ஓட்டுகள் வித்தியாசத்தில் அக்கட்சிக்கு எம்எல்ஏ ஒருவர் கிடைத்துள்ளார்.

