சூட்டை கிளப்பிய போர் மேகம்; பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு லீவு
சூட்டை கிளப்பிய போர் மேகம்; பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு லீவு
ADDED : மே 03, 2025 06:24 AM

இந்தியா போரைத் துவக்கி வான்வெளி தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதரஸா உட்பட பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும்பாலும் மத பாடசாலைகள் தான் அதிகம் உள்ளன. 445 பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களில் 26 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாக, மத விவகாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அச்சம் நிலவுகிறது. இதையொட்டி, அங்குள்ள மதரஸா உள்ளிட்ட பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதரஸாக்களை பயங்கரவாத பயிற்சி கூடமாக நடத்தி வருவதாகவும், ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அங்கு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. ஆனால், அனல் காற்று மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், போர் பதற்றம் தான் விடுமுறைக்கு காரணம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கின்றனர். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மத விவகாரத் துறை இயக்குனர் ஹபிஸ் நஸீர் அஹமது கூறுகையில், ''இங்கு இரு வகை வெப்பம் நிலவுகிறது. ஒன்று இயற்கையான வெப்பம், இன்னொன்று இந்தியா கிளப்பியுள்ள உஷ்ணம்,'' என அவர், பகிரங்கமாக கூறியுள்ளார்.