ADDED : ஆக 23, 2024 06:22 AM

பெங்களூரு:
''சம்பளம் கொடுக்கவும், மின் கட்டணம் செலுத்தவும் பணமில்லை. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் காவிரி குடிநீர் கட்டணம் உயர்த்துவது தவிர்க்க முடியாதது. கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றால், குடிநீர், வடிகால் வாரியத்தை காப்பாற்ற முடியாது,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட, 110 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தில் பணிகள் முடிந்துள்ளன. சோதனை முறையில் தண்ணீர் சப்ளை செய்யும் பணி நடக்கிறது. இது முடிந்த பின், காவிரி குடிநீர் வினியோகம் துவங்கும்.
குழாய்கள் ஆய்வு
இம்மாத இறுதிக்குள்ளோ அல்லது செப்டம்பர் இரண்டாம் வாரமோ, 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் குடிநீர் வினியோகத்தை துவக்கி வைக்கக்கூடும். இன்னும் தேதி முடிவாகவில்லை. தற்போது தினமும் குடிநீர் ஆணைய அதிகாரிகள், குடிநீர் குழாய்களை படிப்படியாக ஆய்வு செய்கின்றனர்.
காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தின் மூலம், 775 எம்.எல்.டி., காவிரி நீர், பெங்களூரின் 110 கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும். 3.50 லட்சம் குடிநீர் இணைப்புகள் அளிக்கலாம்.
ஆனால் இதுவரை 55,000 பேர் மட்டுமே இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். தேவைக்கு தகுந்தபடி தண்ணீர் வினியோகிக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில், 110 கிராமங்களில் வீட்டுக்கு வரும் காவிரி நீர் இணைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
பெங்களூரில் 1.40 கோடி மக்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் குடிநீர் வினியோகிப்பது கஷ்டமாகும்.
சம்பளம் கொடுக்கவும், மின் கட்டணம் செலுத்தவும் பணமில்லை. எனவே, யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் குடிநீர் கட்டணம் உயர்த்துவது தவிர்க்க முடியாதது.
கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றால், குடிநீர், வடிகால் வாரியத்தை காப்பாற்ற முடியாது. ஊழியர்கள் வாழ முடியாது. அனைவருக்கும் கட்டணம் உயர்த்தப்படாது; குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே உயர்த்தப்படும்.
தனியார் மயமாக்கப்படாது
எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 14 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. குடிநீர், வடிகால் வாரியத்துக்காக தனி மின் நிறுவனம் ஆரம்பிக்கப்படும். சோலார் மின்சாரம் பயன்படுத்தி, மின் கட்டணம் சேமிக்கப்படும்; தனியார் மயமாக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், துணை முதல்வரின் செயலர் ராஜேந்திர சோழன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.