வயநாடு நிலச்சரிவு: கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
வயநாடு நிலச்சரிவு: கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2024 01:48 PM

புதுடில்லி: வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா நேரில் சென்று பார்வையிட்டதுடன், சொந்தங்களை இழந்து தவித்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். வயநாடு நிலச்சரிவு குறித்து இன்று (ஆக.,7) லோக்சபாவில் ராகுல் பேசினார்.
அவர் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்னதாக நானும், எனது சகோதரி பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம். கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம். வயநாடு நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.