UPDATED : பிப் 18, 2024 12:44 PM
ADDED : பிப் 18, 2024 10:43 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், தனது தொகுதிக்கு காங்., எம்.பி ராகுல் சென்றார். உயிரிழந்த, 3 பேரின் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம், 31ம் தேதி லட்சுமணன்; கடந்த, 10ம் தேதி அஜீஸ்; யானை தாக்கி உயிரிழந்த நிலையில், 16- ம் தேதி, பால்,42, என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதனால் தனது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, ராகுல், வயநாட்டிற்கு விரைந்தார். பின்னர் அவர் வயநாட்டில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுலின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் தங்களது புகார்களை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.