நாங்களும் களத்தில் இருக்கிறோம்... இருப்பை காட்டும் மார்க்சிஸ்ட் கம்யூ.,
நாங்களும் களத்தில் இருக்கிறோம்... இருப்பை காட்டும் மார்க்சிஸ்ட் கம்யூ.,
ADDED : மார் 03, 2024 06:53 AM
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியை 'இண்டியா' கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கும்படி காங்கிரசிடம் கோரி உள்ளது.
சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியின் வரலாற்றை பார்க்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பி.எஸ்.பி., என்ற பகுஜன் சமாஜ் கட்சியும் ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்ப்புக்காகவும், தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இம்முறையும் போட்டியிட தயாராகி வருகின்றன.
இத்தொகுதியில் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தவிர மற்ற கட்சிகள் எதுவும் வெற்றி பெற்றதில்லை. இக்கட்சிகளுக்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பி.எஸ்.பி., வேட்பாளர்கள் அதிகபட்ச ஓட்டுகள் பெறுகின்றனர்.
இவர்களின் போட்டியால் மூன்று கட்சிகளின் ஓட்டுகளில் சிறிதளவு ஓட்டுகள் இரு கட்சி வேட்பாளர்களுக்கு பிரிகிறது என்பது உண்மை.
நடப்பு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே முதற்கட்ட கூட்டங்களையும் நடத்திவிட்டன.
இத்தொகுதியில் 1998ல் பி.எஸ்.பி.,யின் சிவண்ணா 6,037 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 2009ல் பி.எஸ்.பி.,யின் லட்சுமி நாராயணன் 14,629 ஓட்டுகள் பெற்றார். இந்த இரு தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை.
கடந்த 2014ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் ஸ்ரீராம் ரெட்டி, 26,071 ஒட்டுகளும்; பி.எஸ்.பி.,ன் சைத்ரா பிரசாத் 6,279 ஓட்டுகளும் பெற்றனர்.
கடந்த 2019ல் பி.எஸ்.பி.,யின் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் துவாரகநாத் 23,446 ஓட்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில், மாநில அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் வரலட்சுமி 18,648 ஓட்டுகளும் பெற்றனர்.
இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூ., நான்கு முறையும்; பி.எஸ்.பி., மூன்று முறையும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மார்க். கம்யூ., கட்சியின் மாவட்ட செயலர் முனிவெங்கடப்பா கூறுகையில், ''சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூ., பலமாக உள்ளது. எனவே, தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்படலாம்.
''மாநில அரசியல் குழு கூட்டத்திலும், முன்மொழியப்பட்டு உள்ளது. இத்தொகுதியை இண்டியா' கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் நாகப்பா கூறுகையில், ''பி.எஸ்.பி., வேட்பாளர் தேர்வு குறித்து வரும் 11ம் தேதி தேவனஹள்ளியில் ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்,'' என்றார்
.
- நமது நிருபர் -

