'நாங்கள் எத்னால் டீம் இல்லை' ரமேஷ் ஜார்கிஹோளி பல்டி
'நாங்கள் எத்னால் டீம் இல்லை' ரமேஷ் ஜார்கிஹோளி பல்டி
ADDED : டிச 29, 2024 10:59 PM

ஹொஸ்பேட்: ''நாங்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால் டீம் இல்லை. பா.ஜ., டீம்,'' என்று, அக்கட்சி எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி அந்தர்பல்டி அடித்து உள்ளார்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் ஒரு அணி உருவானது.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோகாக் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஹரா ஹரிஷ், முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா இந்த அணியில் உள்ளனர்.
கட்சி அனுமதி கொடுக்கா விட்டாலும், வக்பு வாரியம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுத்த விஷயத்தில், எத்னால் தலைமையிலான அணி, வடகர்நாடகாவில் ஆக்டிவ்வாக வேலை செய்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்தை பெற்றனர். விஜயேந்திராவுக்கு எதிராக தொடர்ந்து பேசியதால், எத்னாலை கட்சி மேலிடம் அழைத்து கண்டித்தது. பின், அவர் அமைதியானார்.
இந்நிலையில் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹொஸ்பேட்டில் நேற்று அளித்த பேட்டியில், ''நாங்கள் எத்னால் டீம் இல்லை. பா.ஜ., டீம். ஆனால் ஊடகங்கள் தான் எங்களை எத்னால் டீம் என்று கூறுகிறது. வக்பு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், வரும் 4ம் தேதி கம்பளியில் மாநாடு நடக்கிறது.
''இம்மாநாட்டிற்கு விஜயேந்திரா, காங்கிரஸ்காரர்கள் கூட வரட்டும். வக்பு இருண்ட சட்டம். அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ரவி, முனிரத்னா மீதான வழக்குகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டி உள்ளது,'' என்றார்.
இத்தனை நாள் எத்னாலை தங்கள் தலைவர் என்று கூறி வந்த, ரமேஷ், தற்போது எத்னால் டீம் இல்லை என்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில், ஏதாவது விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

