திபெத்துடன் தான் எல்லையை பகிர்கிறோம் சீனாவுடன் அல்ல: அருணாச்சல் முதல்வர்
திபெத்துடன் தான் எல்லையை பகிர்கிறோம் சீனாவுடன் அல்ல: அருணாச்சல் முதல்வர்
ADDED : ஜூலை 10, 2025 03:08 AM

புதுடில்லி : அருணாச்சல் மாநிலம், திபெத்துடன் தான் எல்லை பகிர்ந்து கொள்கிறது; சீனாவுடன் அல்ல,'' என, அம்மாநில முதல்வர் பெமா காண்டு, சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச பிராந்தியத்தை, அண்டை நாடான சீனா நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது.
மாநிலத்தில் உள்ள பல பகுதிகளின் பெயர்களை அவர்கள் மாற்றியுள்ளனர். மேலும், அருணாச்சல் எல்லையில் சீன குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அருணாச்சல் பகுதிகளின் பெயர்களை சமீபத்தில் சீனா மாற்றியது குறித்து முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பெமா காண்டு கூறியதாவது:
நம் நாட்டின் எந்த பகுதியும் சீனாவுடன் நேரடியாக எல்லையை பகிரவில்லை. அருணாச்சல் மாநிலத்தில் மூன்று சர்வதேச எல்லைகள் உள்ளன. பூடானுடன் 150 கி.மீ., மியான்மருடன் 550 கி.மீ., திபெத்துடன் 1,200 கி.மீ., எல்லையை பகிர்கிறோம்.
திபெத், தற்போது சீனாவின் கட்டுப்பாட்டி இருந்தாலும், 1950ல் திபெத்தை சீனா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தது. எனவே இது இந்திய - திபெத் எல்லை என்றே வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது.
அருணாச்சல் பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றுவது புதிதல்ல. இதுவரை ஐந்து முறை இது போல் பெயர் மாற்றியுள்ளனர். சீனாவின் இந்த பழக்கம் எங்களுக்கு தெரியும் என்பதால், இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இந்த பிரச்னையை வெளியுறவு அமைச்சகம் கையாண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளின் பெயர்களை, சீனா தன் இஷ்டத்திற்கு மாற்றி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவும் சீனா பாணியில் இந்த வார்த்தை விளையாட்டில் இறங்கி உள்ளார்.