எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்
எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்
UPDATED : ஏப் 23, 2025 11:30 AM
ADDED : ஏப் 23, 2025 07:53 AM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த சம்பவத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீ ஹிந்துவா? முஸ்லிமா? என்று கேட்டு விட்டு, தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இந்திய கடற்படை வீரர் வினய் நர்வால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்க்கு 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. அதேபோல, ஐதராபாத்தில் பணியாற்றி வரும் உளவுத்துறை அதிகாரி மணிஷ் ரஞ்சன், மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பிரசாத் சாத்பதி, சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் காடதியா ஆகியோரும் இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரசாந்த் சாத்பதி குடும்பத்தினர் கூறியதாவது; பயங்கரவாத தாக்குதல் குறித்து எங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, என்னுடைய தம்பி கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். தம்பியின் மனைவி எங்கு இருக்கிறார் என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. கூடுதல் டி.எஸ்.பி., என்னை தொடர்பு கொண்டடு பேசினார், என தெரிவித்தார்.
சைலேஷ் காடதியா குறித்து அவரது சொந்த ஊரின் துணை தாசில்தார் கூறியதாவது; சைலேஷ் காடதியா உயிரிழந்ததை அனந்த்நாக் போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலம் உறுதி செய்தோம். அவரது மனைவி ஷீத்தல், மகள் நீதி மற்றும் மகன் நாகேஷ் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவரது உறவினர் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். சைலேஷின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைலேஷ் தற்போது மும்பையில் தங்கி பணியாற்றி வந்தார், என்றார்.
கடற்படை வீரர் வினய் நர்வாலின் உறவினர் நரேஷ் பன்சால் கூறுகையில்,' 4 நாட்களுக்கு முன்பு தான் வினய்க்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு, அவர் பயங்கரவாத தாக்குதலில் இறந்து விட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியளித்தது. அவர் கடற்படையில் பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். அவர் கொச்சியில் பணியாற்றி வந்தார்,' எனக் கூறினார்.

