'நமது கிளினிக்'குகளுக்கு வரவேற்பு சுகாதார துறை அதிகாரிகள் தகவல்
'நமது கிளினிக்'குகளுக்கு வரவேற்பு சுகாதார துறை அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 14, 2024 11:28 PM
மைசூரு: மைசூரு நகரில், வெவ்வேறு இடங்களில் சோதனை முறையில் திறக்கப்பட்ட, 'நமது கிளினிக்'குகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று மாதங்களில் 6,000 பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
குடிசை பகுதிகள், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில், கர்நாடகாவின் பல நகரங்களில் நமது கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
மைசூரு மாவட்டத்தில் ஆறு கிளினிக்குகள் திறக்கப்பட்டன. மைசூரு நகரில் மூன்று, கே.ஆர்.நகர். டி.நரசிபுரா, எச்.டி.கோட்டே தாலுகாக்களில் தலா ஒரு நமது கிளினிக்குகளை, சுகாதாரத்துறை திறந்தது.
தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை, நமது கிளினிக்குகளில் சிகிச்சை கிடைக்கிறது. ஆனால், கூலி தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்களால் சிகிச்சை பெற கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் இவர்கள் பணி முடிந்து மாலை வருவதற்குள், கிளினிக்குகள் மூடப்படுகின்றன. நேரத்தை மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
மாலை பணி முடிந்து வரும் கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் நோக்கில், மூன்று மாதங்களுக்கு முன், மைசூரு நகரின் யரகனஹள்ளி, ஹூடஹள்ளியில் சோதனை முறையில், நமது கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
இங்கு காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை இரண்டு ஷிப்டுகளில், கிளினிக்குகள் செயல்படுகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நேரத்தை மாற்றிய பின், நமது கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணக்கை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களில், 6,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது காலையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களே இரவு ஷிப்டிலும் பணியாற்றுகின்றனர். விரைவில் கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை அரசு நியமித்தால், கிளினிக்குகள் மேலும் சிறப்பாக செயல்படும்.
காலை, மாலையில் இலவச சிகிச்சை கிடைப்பதால், அதிகமான மக்கள், நமது கிளினிக்குகளை பயன்படுத்துகின்றனர். கூலி தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உதவியாக உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.