கூட்டுறவு வார விழாவில் 4,777 பேருக்கு ரூ.72.07 கோடியில் நலத்திட்ட உதவி
கூட்டுறவு வார விழாவில் 4,777 பேருக்கு ரூ.72.07 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : நவ 20, 2025 02:28 AM
நாமக்கல், கூட்டுறவு வார விழாவில், 4,777 பயனாளிகளுக்கு, 72.07 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, 72வது ஆண்டை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, பரிசு, சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 14 முதல், நாளை (இன்று) வரை, கூட்டுறவுத்துறை சார்பில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா--2025 சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024ல், தினமும், ஐந்து கோடி என, 1,825 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, தினமும், 7.50 கோடி என, 2,735 கோடி ரூபாயும், 2026ல், தினமும், 10 கோடி என, 3,650 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக, மத்திய கூட்டுறவு வங்கி மாறியுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது, மாநில அளவில் சிறப்பான கூட்டுறவு வங்கியாக திகழ அனைத்து நிர்வாகிகளும், பணியாளர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 4,777 பயனாளிகளுக்கு, 72.07 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, துணை மேயர் பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மேலாண் இயக்குனர் சந்தானம், மோகனுார் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் குப்புசாமி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

