ADDED : பிப் 07, 2025 05:22 AM
வயநாடு: கேரளாவில் பழங்குடியின பெண்ணை தாக்கிக் கொன்ற புலி உட்பட மூன்று புலிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில் ராதா, 45, என்ற பெண், சில தினங்களுக்கு முன் புலி தாக்கியதில் உயிரிழந்தார். நக்சல் தேடுதல் வேட்டைக்கு சென்ற அதிரடிப்படையினர் அவரது சடலத்தை மீட்டனர். பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சை தொடர்ந்து அவர்கள் அமைதியாகினர். இந்நிலையில், வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் கிடைத்தது. அது, ராதாவை கொன்ற புலி என கூறப்படுகிறது.
இதுபோல, வயநாடு குறிச்சியாடு வனப்பகுதிக்குள் இரண்டு புலிகளின் உடல்களை, ரோந்து பணிக்கு சென்ற வனத்துறையினர் மீட்டனர். அடுத்தடுத்து மூன்று புலிகள் உயிரிழந்ததால், இதற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழுவை அமைத்து, அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, வடக்கு மண்டல தலைமை வனக்காவலர் கே.எஸ்.தீபா தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின பெண்ணை கொன்றதால் புலி அடித்துக் கொல்லப்பட்டதா அல்லது புலிகளின் மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி சிறப்புக் குழுவுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.