சினிமாவில் பிரசாரத்தை துவங்கின மேற்கு வங்க அரசியல் கட்சிகள்!
சினிமாவில் பிரசாரத்தை துவங்கின மேற்கு வங்க அரசியல் கட்சிகள்!
ADDED : ஜூன் 27, 2025 11:57 PM

மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் வெள்ளித்திரையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சமூக அக்கறை மற்றும் சிறந்த கலைப் படைப்புகளுக்கு பெயர் போன பெங்காலி சினிமா தற்போது பிரசார உத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, 2026 ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது.
வாழ்க்கை வரலாறு
'ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் இருக்கும் மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்த முறை எப்படியாவது திரிணமுல் காங்கிரசை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கம்யூ., கட்சிகள், தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், ஆளும் திரிணமுல் காங்., எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் கம்யூ., கட்சிகள் வெள்ளித்திரையை பிரசார உத்தியாக பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய மறைந்த மார்க்.கம்யூ., தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஜோதி பாசுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அக்கட்சி எடுத்துள்ளது.
இதில், ஜோதி பாசுவின் கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் நசிருதீன் ஷா நடித்துள்ளார்.
ஜோதி பாசுவை மேற்கு வங்க ஹீரோவாக சித்தரித்துள்ள இந்த திரைப்படம், மார்க்.கம்யூ., தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என கட்சி மேலிடம் நம்புகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த திரைப்படத்தை வெளியிட மார்க்.கம்யூ., திட்டமிட்டுள்ளது.
புதிய படம்
திரிணமுல் காங்கிரசுக்கு கடும் சவாலாக விளங்கும் பா.ஜ.,வும், தி பெங்கால் பைல்ஸ் திரைப்படம் வாயிலாக பிரசாரத்தை துவக்கிஉள்ளது.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இதில், பாலிவுட் மூத்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். பா.ஜ., ஆதரவு நடிகர் என கூறப்படும் இவருக்கு, 2022ல் சினிமா துறையின் உயரிய விருதான, 'தாதாசாகேப் பால்கே' விருதை மத்திய பா.ஜ., அரசு வழங்கி கவுரவித்தது.
மேற்கு வங்கத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்காளர்களிடையே இவருக்கு செல்வாக்கு உள்ளது. துர்கா பூஜை பண்டிகையின் போது, தி பெங்கால் பைல்ஸ் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் துர்கா சிலை எரிப்பு, 'லவ் ஜிஹாத்' போன்ற காட்சிகளுடன், வகுப்புவாத பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளன. படம் வெளியாகும் போது, மேற்கு வங்கத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என சொல்லலாம்.
ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு ஆதரவாக, இயக்குநர் அரிந்தம் சில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சில திரிணமுல் காங்., நிர்வாகிகளும் நடிக்கின்றனர். இதில், கம்யூ., மற்றும் பா.ஜ.,வை விமர்சிக்கும் வகையில், மறைமுகமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -