ராகுல் என பலருக்கு பெயர் இருந்தால் என்ன செய்ய முடியும்? தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ராகுல் என பலருக்கு பெயர் இருந்தால் என்ன செய்ய முடியும்? தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
UPDATED : மே 03, 2024 05:08 PM
ADDED : மே 03, 2024 04:29 PM

புதுடில்லி: ஒரே பெயரை கொண்டவர்கள் பலர் ஒரே தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அரசியல் தலைவர்களின் பெயர்களை வைத்ததற்காக அவர்களை போட்டியிட தடை விதிக்க முடியாது எனக்கூறியுள்ளது.
பொது நல மனு
பாபு ஸ்டீபன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‛‛ முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களை குழப்பும் வகையில், ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இதனால், முக்கிய பரமுகர்கள் குறைந்தளவு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடையும் அபாயம் உள்ளது.
நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடக்கும் வகையில், இந்த நடைமுறையை நிறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் '' எனக்கூறியிருந்தார்.
அனுமதி
இதனை விசாரித்த நீதிபதி பிஆர் கவாய், ராகுல் அல்லது லாலு பிரசாத் என குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயர் வைத்தால், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.
5 பேர்
ஏப்.,19 ல் தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.