பேசியதில் என்ன தப்பு; சீக்கியர்கள் சொல்லட்டும் என்கிறார் ராகுல்!
பேசியதில் என்ன தப்பு; சீக்கியர்கள் சொல்லட்டும் என்கிறார் ராகுல்!
UPDATED : செப் 21, 2024 05:58 PM
ADDED : செப் 21, 2024 05:51 PM

புதுடில்லி: '' அமெரிக்காவில் சீக்கியர் குறித்து நான் பேசியதில் தவறு உள்ளதா என இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் கூற வேண்டும், '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டன்னில் நடந்தை கலந்துரையாடலில் அவர் பேசுகையில், '' இந்தியாவில் நடக்கும் மோதல் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா அல்லது குருத்வாராவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனரா என்பது பற்றியதே'' என்றார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராகுல், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் நான் கூறியது குறித்து பொய் பரப்ப பா.ஜ., துவங்கிவிட்டது. நான் சொன்னதில் ஏதேனும் தவறு உள்ளதா என இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சீக்கிய சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும், இங்கே தங்களது மதத்தை அச்சமின்றி பின்பற்ற முடிகிறதா?
வழக்கம் போல் பா.ஜ., பொய் பரப்ப துவங்கிவிட்டது. அவர்கள் உண்மையின் பக்கம் நிற்க முடியாததால், எனது குரலை அமைதியாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தியாவை வரையறுக்கும் மாண்புகள், வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் அன்பு குறித்து எப்போதும் பேசுவேன். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.