காங்., தலைவர் கார்கேயின் சொந்த ஊரில் நடப்பது என்ன?
காங்., தலைவர் கார்கேயின் சொந்த ஊரில் நடப்பது என்ன?
ADDED : பிப் 04, 2024 11:06 PM

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின், சொந்த ஊரான கலபுரகியில் மீண்டும் வெற்றி பெற, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. இதற்காக காங்கிரசில் இருக்கும் பாபுராவ் சிஞ்சனுாரை, மீண்டும் பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இவரது சொந்த ஊர் கலபுரகி. கலபுரகி லோக்சபா தொகுதிக்கு, 1952 முதல் 2019 வரை 19 தேர்தல்கள் நடந்து உள்ளன. இதில் காங்கிரஸ் 16 முறையும், பா.ஜ., இரண்டு முறையும், ம.ஜ.த., ஒரு முறையும் வென்று உள்ளது. கலபுரகி தொகுதியில் இருந்து 2009, 2014ல் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார்.
பா.ஜ., 'ஸ்கெட்ச்'
இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள், காங்கிரசில் இருந்த உமேஷ் ஜாதவ், பாபுராவ் சிஞ்சனுார். இதனால் அவர்கள் இருவரையும் வைத்தே, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக, பா.ஜ., 'ஸ்கெட்ச்' போட்டது.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில், குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாபுராவ் சிஞ்சனுார், கட்சி தலைவர்கள் சிலர் மீது, அதிருப்தியில் இருந்தார். இதனை பயன்படுத்தி அவரை பா.ஜ.,வுக்கு அழைத்து வந்து, எம்.எல்.சி., பதவி கொடுத்தனர்.
உமேஷ் ஜாதவ் 2018 தேர்தலில், சிஞ்சோலி தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனாலும் எம்.பி., பதவி ஆசை காட்டி, அவரையும் பா.ஜ., இழுத்து கொண்டது. இதையடுத்து 2019 ல் நடந்த லோக்சபா தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஓரம்போ...ஓரம்போ!
இதற்கிடையில் பா.ஜ., மீது ஏற்பட்ட அதிருப்தியால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பாபுராவ் சிஞ்சனுார் மீண்டும் காங்கிரஸுக்கு வந்து விட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எம்.எல்.சி., பதவி எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. அவரை காங்கிரஸ் தலைவர்கள் ஓரம்கட்ட ஆரம்பித்து உள்ளனர்.
அதிருப்தியில் இருக்கும் அவரை மீண்டும், பா.ஜ.,வுக்கு இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது. அவர் கோலி சமூகத்தின் பிரபல தலைவர். கலபுரகி லோக்சபா தொகுதியில் 3 லட்சம் கோலி சமூக ஓட்டுகள் உள்ளன.
பாபுராவ் சிஞ்சனுார் வந்து விட்டால், கோலி சமூக ஓட்டுகள் அப்படியே கிடைக்கும் என்பது, பா.ஜ.,வின் கணக்கு.
கலபுரகி பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள உமேஷ் ஜாதவ், வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யவில்லை என்று, அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. கட்சியிலும் அவருக்கு மீண்டும் 'சீட்' கொடுக்க, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாபுராவ் சிஞ்சனுாரை காங்கிரசில் இருந்து, அழைத்து வந்து அவருக்கு சீட் கொடுக்க, பா.ஜ., திட்டமிட்டு இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது
- நமது நிருபர் -.

