ஜாமினில் வந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், சாட்சிகள் நெருக்கடியில் உள்ளனரா என்பது தொடர்பாக விசாரிக்க முன்வந்த உச்ச நீதிமன்றம் , அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய மறுத்து விட்டது. 'ஜாமின் அளித்தால் அடுத் த சில நாட்களிலேயே அமைச்சராகி விடுகிறீர்கள்; என்னதான் நடக்கிறது?' என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
சாட்சிகளுக்கு நெருக்கடியா என விசாரிக்கவும் முடிவு
புதுடில்லி, டிச. 3-
தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 - 2015 அ.தி.முக., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அவர் மீது புகார்கள் கூறப்பட்டன.
இது தொடர்பாக, தமிழக போலீசின் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது.இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தன் அமைச்சர் பதவியை கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில், கடந்த செப்., 26ல், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்., 30ல், இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தனியாக ஒரு நீதிபதியை நியமிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே, கடந்த செப்., 29ல் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். மின்சாரம், கலால் உள்ளிட்ட துறைகள் அவருக்கு வழங்கப்பட்டன.
செந்தில் பாலாஜி மீது புகார் கூறிய வித்யா குமார் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜாமின் உத்தரவை காரணம் காட்டி பலரும் ஜாமின் பெறுவதற்கு வாய்ப்பாக உள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், 'இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடனும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடும்; ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்த விசாரணை குறித்து ஊடகங்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அரசியல் ரீதியிலும் அழுத்தங்கள் உருவாகின்றன' என, வாதிட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம், அமர்வு கூறியதாவது:
நாங்கள் உங்களுக்கு ஜாமின் அளித்தால், அடுத்த சில நாட்களிலேயே நீங்கள் அமைச்சராகி விடுகிறீர்கள். நீங்கள் மூத்த அமைச்சர் பதவியில் இருப்பதால், சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படாதா என்றே பொதுவாக எல்லாரும் நினைப்பர். என்னதான் நடக்கிறது?
செந்தில் பாலாஜி மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது அவர் அமைச்சர் பதவியில் உள்ளதால், அவருக்கு எதிராக சாட்சியம் அளிப்பதில் சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒரு விஷயத்தை மட்டுமே ஏற்று, இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.
மற்றபடி, செப்., 26ல் பிறப்பித்த ஜாமின் உத்தரவைத் தொடர்ந்து, பலரும் இதுபோன்று ஜாமின் பெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
சட்டத்துக்கு உட்பட்டே, ஜாமின் வழங்கப்பட்டது. அதனால், அது தொடர்பாக விசாரிக்க மாட்டோம்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை, வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.