கர்நாடக காங்.,கில் என்ன நடக்கிறது? மேலிடம் கவனிப்பதாக தகவல்!
கர்நாடக காங்.,கில் என்ன நடக்கிறது? மேலிடம் கவனிப்பதாக தகவல்!
ADDED : ஜன 17, 2025 07:25 AM

பெங்களூரு: ''கர்நாடக காங்கிரசில் தினமும் என்ன நடக்கிறது என்பதை மேலிடம் கூர்ந்து கவனிக்கிறது,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தல் முடிந்த பின், கர்நாடக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று எங்கள் கட்சியின் மேலிட தலைவர் வேணுகோபால் கூறியதை, அமைச்சர் சதீஷ் ஜார்கஹோளி இப்போது ஞாபகப்படுத்தி இருக்கிறார். நானும் வேணுகோபால் அளித்த பேட்டியை கவனித்தேன்.
மாநில தலைவர் சிவகுமார் துணை முதல்வராக உள்ளார். அவரிடம் பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசன துறை என்று இரண்டு முக்கிய துறைகள் உள்ளன. இந்த துறைகளையும் கவனித்து கொண்டு, தலைவராக இருந்து கட்சியை வலுப்படுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும்.
நான் கட்சியின் தலைவராக இருந்த போது அமைச்சராக இருந்தேன். எனக்கும் நெருக்கடி ஏற்பட்டது. என்னை மேலிடம் அழைத்து பேசியது. கட்சியின் நலனுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தலைவராக நீடித்தேன்.
தற்போது, கர்நாடக காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை மேலிடம் கூர்ந்து கவனிக்கிறது. அப்படி கவனிக்கா விட்டால் எஸ்.சி., ---- எஸ்.டி., சமூக எம்.எல்.ஏ.,க்களை நான் இரவு விருந்திற்கு அழைத்தது தெரியாமல் போயிருக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி முதல்வருக்கு யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.