ADDED : டிச 26, 2024 06:44 AM

மொபைல் போன் பார்த்து, மூளையை மழுங்கடிக்க செய்வதும், புத்தகத்தை படித்து மூளைக்கு பயிற்சி கொடுப்பதும், நமது கையில் தான் உள்ளது.
துாக்கு தண்டனை கைதியாக இருந்தபோது, ஈராக்கை ஆட்சி செய்த சதாம் உசேனிடம், 'கடைசி ஆசை என்னவென்று?' கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர், 'எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய தி ஓல்ட் மேன் அனட் தி சீ எனும் புத்தகம் வேண்டும்' என பதில் கூறினார். அந்த புத்தகத்தை படித்து முடித்ததும், துாக்கு மேடையில் ஏறினார். இதிலிருந்து தெரிந்து இருக்கும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம்.
புத்தகங்கள் படித்தால் அறிவு பெருகும். கற்பனை திறன்; வாசிப்பு திறன்; எழுதும் திறன்; நினைவாற்றல் உள்ளிட்ட திறன்கள் மேம்படும். புத்தகங்களின் மூலம், பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, நம் முன்னோர்களின் வரலாற்றை அறிய முடியும்.
பங்களிப்பு
வரலாற்றை அறிவதற்கு புத்தகங்களின் பங்களிப்பு மகத்தானது. நாம் யார் என்பதை அறிவதற்கு, வரலாற்றை படிப்பது மிக அவசியம். ஒரு கதையை வாசிக்கும்போது, நாமும் அந்த கதைக்குள் சென்றுவிடுவோம்; கதை பாத்திரமாகவே வாழ்ந்து விடுவோம்.
உதாரணமாக, ஒரு வீட்டில் இருவர் பேசிக் கொள்ளும் வசனங்களை வாசிக்கும் போது, நாமும் அந்த வீட்டில் மூன்றாவது நபராக இருப்போம்.
அடர்ந்த காட்டில் புலியை வேட்டையாட சென்ற வேட்டைக்காரனது கண்களுக்கு புலி தென்படவில்லை. ஆனால், புலியின் கண்களில், எத்தனை தடவை அந்த வேட்டைக்காரன் சிக்கியிருப்பான் என்ற வரிகளை படித்த பின்பு, வேட்டையாட சென்றால் வாசகனின் கதி. அதோ கதி தான். இந்த காலத்தில், 'யாரப்பா புத்தகங்கள் படிக்கின்றனர்' என்று சிலர் கூற கேட்டிருப்போம்.
இதற்கு பதில், ஏகப்பட்ட எழுத்தாளர்களின் தீவிர வாசகர்களாக பல லட்சம் பேர் உள்ளனர். நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக் கொள்வர், ஆனால் வாசகர்கள் அப்படி இல்லை, இதனால் பலருக்கும் தெரிவதில்லை, வாசகர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகம் என்று.
தினமலர்
காலையில் எழுந்ததும் 'தினமலர்' நாளிதழ் படித்தால் தான், பலருக்கு பொழுதே விடியும். பல வாசகர்கள், தங்கள் புத்தகத்தின் அட்டை படம் கசங்கினாலோ, கிழிந்தாலோ புது புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இருக்கும்.
அவர்களது பார்வையில் புத்தகங்கள் அனைத்தும் பகவத் கீதை, பைபிள், குர் ஆன் போன்ற புனித நூல்களே.
அருமையான, எளிமையான யோசனை கூறும் திண்டுக்கல் சனா
புத்தக வாசிப்பின் அவசியத்தை பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு புரியும் படி, எளிமையாக கூறுகிறார், திண்டுக்கல்லை சேர்ந்த சனா, 32, என்ற பெண், 'புஸ்தகா டிஜிட்டல் மீடியா' என்ற நிறுவனத்தில் 'இன் டிசைன்' குழு தலைவியாக உள்ளார். எம்.பி.ஏ., படித்துள்ளார்.
இவர், பெங்களூரில் நடந்து வரும் தமிழ் புத்தக திருவிழாவில், தன் நிறுவனத்தின் ஸ்டாலை நிர்வகிக்கிறார். வாசிப்பு பற்றி அவர் கூறியது:
இன்றைய இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' பார்ப்பது, யூடியூப்பில் 'ஷாட்ஸ்' பார்ப்பதில் நேரத்தை செலவிடுகின்றனர். சிலர், மொபைல் கேம்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். மொபைல் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கும் செல்வதற்கு ஒரே தீர்வு புத்தகம் வாசிப்பது தான்.
புத்தக பரிசு
இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும். அதற்கு பெற்றோர் முழு ஆதரவு அளிக்க வேண்டும். பண்டிகை தினங்கள், பிறந்த நாள் விழா போன்றவற்றில் புத்தகங்களை பரிசாக அளித்து ஊக்கப்படுத்துங்கள். பிள்ளைகளுக்கு தரும் 'பாக்கெட் மணியில்' இருந்து, புத்தகம் வாங்குமாறு அறிவுரை கூறுங்கள்.
புத்தகம் படிக்கும்போது, எதுவும் யோசிக்காமல் படிக்க வேண்டும் என்பதால், கவனசிதறல்கள் குறையும். தொடர்ந்து படிக்கும்போது, நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படிக்கும்போது, சே! இது பற்றி நமக்கு இவ்வளவு நாள் தெரியவில்லையே என்ற ஆதங்கம் உண்டாகும். புனைக்கதைகள் படிக்கும்போது கதைக்குள்ளே மூழ்கி விடுவோம். நல்ல குணங்கள், பண்புகள், ஒழுக்கம் என தம்மை தாமே செதுக்கிக் கொள்ள முடியும்.
முதலீடு
வாசிப்புப் பழக்கத்தை துவங்குபவர்கள் கவிதை, சிறுகதைகளில் இருந்து துவங்கலாம். திரில்லர், புனைவுக் கதைகள் போன்றவற்றை படிக்கலாம். சிறுவர்கள் நீதிக்கதைகள், அதிகம் படம் உள்ள புத்தகங்களை படிக்கலாம். படங்கள் அதிகம் உள்ள புத்தகங்களை வாசிக்கும் போது, கவனம் சிதறாமல் வாசிப்பர்.
புத்தகம் வாங்குவதை செலவு என நினைக்காதீர்கள். அது உங்களின் அறிவை பெருக்குவதற்கு நீங்கள் செய்யும் முதலீடு. எத்தனையோ வகைகளில் பணத்தை வீணாக செலவு செய்கிறீர்கள், அப்படி இருக்கையில் மாதம் 200 ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்க முடியாதா என நறுக்கென கூறினார்.
நான்கு ஆண்டுகளாக புத்தகம் விற்பனை செய்து வருகிறேன். புத்தகத்திற்கும், எனக்குமான காதலை வார்த்தகளால் விவரிக்க முடியாது. புத்தகம் படிக்கும்போது மன அழுத்தம் குறைந்து, நிம்மதியாக உணர்வேன். ஒரு புத்தகத்தை தொட்டுவிட்டால், அதை முழுமையாக படிக்காமல் துாங்க மாட்டேன்.
இவ்வாறு தனது கருத்தை நிறைவு செய்தார்
. -நமது நிருபர் -