ADDED : ஜன 20, 2025 06:53 AM

கொப்பால்: ''அஞ்சனாத்ரியில் இருந்து, அயோத்திக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கை,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
கொப்பாலில் அவர் அளித்த பேட்டி:
ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு, ராம பக்தர் ஆஞ்சநேயர் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் இருந்து, நேரடி ரயில் போக்குவரத்து துவக்க வேண்டும் என, பயணியர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவிலை பார்த்தவர்கள், ராமபக்தர் ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ள கொப்பால், கங்காவதியில் உள்ள அஞ்சனாத்ரி மலைக்கு வந்து, தரிசனம் செய்கின்றனர்.
அதே போன்று அஞ்சனாத்ரிக்கு வரும் பக்தர்கள், அயோத்திக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால் நேரடி ரயில் இணைப்பு இல்லாததால், செல்ல முடிவதில்லை.
அஞ்சனாத்ரியில் இருந்து, அயோத்திக்கு நேரடி ரயில் போக்குவரத்து துவக்கும்படி ராமர், ஆஞ்சநேய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரயில் இணைப்பு ஏற்படுத்தும்படி, கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியும் கூட, கோரிக்கை விடுத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பின், இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும்.
கங்காவதி ரயில் நிலையத்துக்கு, அஞ்சனாத்ரி ரயில் நிலையம் என, பெயர் சூட்டும்படி பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே மாநில அரசு, மத்திய ரயில்வேத் துறைக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. விரைவில் இதுகுறித்து, மத்திய அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.