ஏ.டி.எம்., கொள்ளையர்கள் எங்கே? ஹைதராபாதில் தேடுதல் வேட்டை!
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் எங்கே? ஹைதராபாதில் தேடுதல் வேட்டை!
ADDED : ஜன 18, 2025 12:14 AM

பீதர்: கர்நாடகாவில் ஏ.டி.எம்.,மிற்கு பணம் நிரப்ப சென்ற தனியார் ஏஜென்சி ஊழியரை சுட்டுக் கொன்று, 93 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த கொள்ளையர்களை தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பீதர் டவுன் சிவாஜி சதுக்கம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,மில் நேற்று முன்தினம் பணம் நிரப்ப வந்தபோது, தனியார் ஏஜென்சி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு, 93 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குண்டு துளைத்ததில் ஏஜென்சி ஊழியர் கிரி வெங்கடேஷ் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகுமார் என்ற ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரும் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இதை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக, போலீசார் கூறி உள்ளனர்.
பீதரில் இருந்து தப்பிய கொள்ளையர்கள், ஹைதராபாத் சென்றனர். அங்கிருந்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு செல்ல ஆம்னி பஸ்சில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பஸ் கிளீனரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பினர்.
இதற்கிடையில், பீதரில் கர்நாடக அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, ரஹீம்கான் நேற்று ஆய்வு செய்தனர். மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஹரிசேகரனும் பீதரில் விசாரணை நடத்தினார்.
பின், ஹரிசேகரன் கூறுகையில், ''கொள்ளை சம்பவத்தில் இருவர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளோம். அவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து இருக்கிறோம். விரைவில் கைது செய்யப்படுவர். கொள்ளையர்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைத்துள்ளோம். பீதர், கலபுரகி, ஹைதராபாதில் தேடுதல் வேட்டை நடக்கிறது,'' என்றார்.