'டிரேட் மார்க்' வழக்கில் விஸ்கி பாட்டில் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் விசித்திரம்
'டிரேட் மார்க்' வழக்கில் விஸ்கி பாட்டில் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் விசித்திரம்
ADDED : ஜன 07, 2024 01:55 AM

புதுடில்லி,மது வகை தொடர்பான 'டிரேட் மார்க்' எனப்படும் வணிக முத்திரை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற அமர்வில் மது பாட்டில்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சிஅடைந்த நீதிபதிகள், பின் சுதாரித்தனர்.
'பெர்னார்ட் ரிச்சர்டு இந்தியா' என்ற மது உற்பத்தி நிறுவனம் சார்பில், 'பிளண்டர்ஸ் பிரைட், இம்பீரியல் புளூ' என்ற விஸ்கி வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 'ஜே.கே. என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் சார்பில், 'லண்டன் பிரைட்' என்ற பெயரில் விஸ்கி தயாரிக்கப்படுகிறது.
டிரேட் மார்க் பெற்றுள்ள தங்களுடைய மது வகையின் பெயரைப் போன்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பெர்னார்ட் ரிச்சர்டு இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், பெயர் ஒற்றுமை ஏதுமில்லை என, வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பெர்னார்ட் ரிச்சர்டு இந்தியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இரண்டு மதுவகைகளையும் அமர்வின் முன் வைத்தார்.
இரண்டு மது பாட்டில்களும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர் வாதிட்டார். மது பாட்டில்கள் முன் வைக்கப்பட்டதும் நீதிபதிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
சுதாரித்த அவர்கள், இது தொடர்பாக, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.