ADDED : அக் 16, 2024 07:22 AM

மைசூரு: ''முஸ்லிம்களை எதிர்க்கும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தான் உண்மையான பயங்கரவாதிகள்,'' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹூப்பள்ளி கலவரத்தில் முஸ்லிம் சமூகத்தின் பெயரை பா.ஜ., விமர்சித்துள்ளது. அவர்களின் பெயரை கேட்டாலே, பயங்கரவாதிகளுடன் பா.ஜ.,வினர் ஒப்பிடுகின்றனர். ஆனால் பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் தான் உண்மையான பயங்கரவாதிகள்.
மாநிலத்தில் மொத்தம் 43 வழக்குகளை அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒன்பது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. மீதமுள்ள 34 வழக்குகள் பா.ஜ., ஆட்சி காலத்தில் போடப்பட்டவை. இந்த வழக்குகள், விவசாயிகள், மாணவர்கள், கன்னட ஆதரவு போராட்ட குழுவினர் மீது தொடரப்பட்டவை.
ஹூப்பள்ளி கலவர வழக்கில் முஸ்லிம்கள் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை பா.ஜ.,வினர் பெரிதுபடுத்துகின்றனர். முதல்வர் சித்தராமையா மீது முடா வழக்கு தொடர்ந்த ஸ்நேகமயி கிருஷ்ணா மீது, 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட குற்றப் பின்னணி கொண்ட அவர், முதல்வர் சித்தராமையாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது சரியா. தினமும் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு சென்று அழுத்தம் கொடுக்கின்றனர். பா.ஜ., தலைவர்கள், எதிரிகள் போன்று செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.