சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்சீவ் கன்னா; இவர் யார் தெரியுமா?
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்சீவ் கன்னா; இவர் யார் தெரியுமா?
ADDED : அக் 17, 2024 10:56 AM

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரைத்தார். இவர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்தார்.
இவர் வரும் நவம்பர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு பதவியேற்பார். வரும் 2025ம் ஆண்டு மே மாதம் வரை பதவியில் இருப்பார்.
சஞ்சீவ் கன்னா யார்?
* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் இவர் பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.
* இவரது தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கன்னா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.
* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.
* டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
* ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
* இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.

