தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
UPDATED : ஆக 17, 2025 09:36 PM
ADDED : ஆக 17, 2025 07:54 PM

புதுடில்லி: தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்யும் தேர்தல் செப். 9ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் பார்லிமென்டின் இரு அவைகளின் (லோக் சபா, ராஜ்ய சபா) எம்பிக்கள் (782 பேர்), துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். வேட்பாளராக போட்டியிடுபவர் ஓட்டளிக்க முடியாது.
தேர்தலில் பாஜ கூட்டணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.17) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு, தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜ தலைவர் நட்டா அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளுடன் பேசுவோம்
துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பிறகு நட்டா கூறியதாவது: எதிர்க்கட்சிகளுடனும் பேசுவோம். துணை ஜனாதிபதிக்கு நடக்கும் தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். கட்சி மூத்த தலைவர்களும் தொடர்பில் இருக்கின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர் என்றார்.
நன்றி
சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ' என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் நட்டா, பார்லி குழு உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததை நினைத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியடைந்தேன். என் கடைசி மூச்சு வரை நாட்டிற்காக கடினமாக உழைப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.